சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில், கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் - 2022 பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 5.89 கோடி மதிப்பில், பெற்றோர்கள் காத்திருப்பு அறை மற்றும் உணவகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் சுமார் 5 கோடி 89 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. இந்தக் கட்டடத்தைப் பொறுத்தவரை, எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
அவ்வாறு வருபவர்கள் மருத்துவமனையில் குழந்தைகளைச் சேர்த்து விட்டு, தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஆகையால், நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மக்களின் பங்களிப்பு, தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் அரசின் பங்களிப்பு என்ற பல்வேறு அமைப்புகள் இந்தத் திட்டத்தின் பங்கீட்டில் பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகள் காலம் நடைமுறையில் இல்லாமல் போனதை, மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்குவதற்காக புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதற்காக சுமார் 2 கோடியே 25 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் நிதியாக கொண்டு மீதம் உள்ள தொகையை அரசு அளித்து, தேசிய நல்வாழ்வுக் கழகத்தின் மூலம் 5 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்தக் கட்டடம் கட்டப்பட இருக்கிறது'' என்றார்.
மேலும், ''குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டவர்கள் இங்கு தங்கலாம். சுமார் 12 குளியல், 16 கழிப்பறைகள் என 2 மின் தூக்கி வசதிகளோடு தரைத்தளம் மற்றும் 4 தளங்களுடன் கூடிய இந்த கட்டடம் கட்டப்பட இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இடத்தில் தரைத்தளத்தில் ஒரு சமையல் அறையோடு கூடிய ஒரு கட்டடத்திற்கும் இடம் ஒதுக்கி இருக்கின்றனர். மிக விரைவில் அதுவும் இங்கு கட்டப்பட இருக்கிறது.
குழந்தைகளுக்கான தாய்பால் வங்கியும் ஆரம்பிக்க உள்ளது. பெர்டிலிட்டி சென்டர் எனும் கருத்தரிப்பு மையங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக தனியார் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அரசின் சார்பிலும் கருத்தரிப்பு மையம் அமைய வேண்டும் என்ற நிலையில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது கருத்தரிப்பு மையங்களை பொறுத்தவரையில் இந்த மகப்பேறு குழந்தைப்பேறு கருத்தரிப்பு மையம் என்பது நல்ல விஷயம்.
ஆனால், அரசின் திட்டத்தைத் தாண்டி மக்கள் பங்கும் அதற்காக செலவிடப்பட வேண்டிய தொகை என்பதும் முக்கியமானது. அந்த வகையில் எழும்பூரிலும், மதுரையிலும் 2 கருத்தரிப்பு மையங்கள் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2 மருத்துவ கருத்தரிப்பு மையங்களும் இன்றைக்கு கட்டுமானப் பணிகள் நிறைவுற்று அதற்கான பரிசோதனைகள் ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும் அந்த பரிசோதனை முடிவுகள் விரைவில் வரப்பட உள்ளது.
சென்னைக்கு அரசாணை வெளியீட்டு திறப்பு விழா இருக்கிற நிலையில், மதுரைக்கும் வெகு விரைவில் பரிசோதனை தொடங்கி பெரிய அளவில் பரிசோதனைகளை நடத்தி மிக விரைவில் அந்த கருத்தரிப்பு மையங்கள் இரண்டும் தமிழ்நாட்டில் தொடங்கப்பட இருக்கிறது. அதாவது, அரசாங்கத்தின் சார்பில் முதன்முதலாக தமிழ்நாட்டில் வர இருக்கிறது.
இந்தியாவிலேயே கருத்தரிப்பு மையங்களைப் பொறுத்தவரையில் அரசின் சார்பில் முதல்முறையாக எடுக்கப்படுகிற நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும். ஆகஸ்ட் இறுதியில் பணிகள் முடிவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்க இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் திறக்கப்படும்.
ஒருவருக்கு கலைஞர் மாராத்தான் நிர்வாகம் அமைப்பு, 1000 ரூபாய், டி.சார்ட், உணவு, பதக்கம் உள்ளிட்டவைக்கு செலவு செய்கிறது. மாராத்தானில் பங்கேற்க கட்டாயமாக மருத்துவக் கல்லூரி மாணவர்களோ மருத்துவர் கட்டணத் தொகை செலுத்துவதற்கு வற்புறுத்தப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்ட உச்சபட்ச நடவடிக்கை எதுவோ அது மிக நிச்சயமாக எடுக்கப்படும்.
கலைஞர் பன்னாட்டு மாராத்தான் போட்டிக்கு திருநங்கைகளுக்கான கட்டணத் தொகை 100 ரூபாயாக குறைக்கப்பட்டபோது, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஒவ்வொரு திருநங்கைக்கும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி, அதில் கலந்து கொள்ள வைத்தார். இது நல்ல நோக்கத்திற்காக நடைபெறுகிறது. ஆதாரம் இல்லாமல் கலங்கத்தை கற்பிக்காதீர்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தமிழக ஆளுநரின் உளறலுக்கு எல்லை இல்லை" - வைகோ விளாசல்!