சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்களை தேர்வு செய்ய ஆன்லைன் கலந்தாய்வு குறித்த அறிவிப்பில், "தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 762 இடங்களும், இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரியில் 23 இடங்களும், அரசுப் பல்மருத்துவக்கல்லூரிகளில் 37 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக அளிக்கப்படுகிறது.
மேலும் கேகே நகர், இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிப்பில் 50 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் நிரப்பப்பட உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் கடந்தாண்டு வரையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு மாணவர்கள் கல்லூரி மாற்றம் செய்ய 2 சுற்றுகள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 3 சுற்று கலந்தாய்வில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு மாணவர் அகில இந்திய ஒதுக்கீட்டிலும், மாநில அரசின் ஒதுக்கீட்டிலும் இடத்தை மாறி மாறி தேர்வு செய்ய முடியும். வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடத்தை தேர்வு செய்த பின்னர் 3வது சுற்றில் மாநில ஒதுக்கீட்டு இடத்தில் சேர்ந்தால், அவர் அகில இந்திய ஒதுக்கீட்டில் எடுத்த இடம் காலியாகும்.
அதன் பின்னர் நடைபெறும் ஸ்டே வேகன்சியில் (late vacancy) அகில இந்திய ஒதுக்கீட்டில் அந்த இடம் நிரப்பாவிட்டால் காலியாகவே இருக்கும். அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாமல் இருந்ததால் கடந்தாண்டு 6 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருந்தது. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி நர்சிங் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு அட்டவணையை தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு https://mcc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி முதல்சுற்றுக் கலந்தாய்விற்கு ஜூலை 20ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை பதிவு செய்யலாம். மேலும் ஜூலை 22ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்யலாம். கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்கள் விவரம் ஜூலை 29ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் ஜூலை 31ம் தேதி முதல் 4ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.
அதைத் தொடர்ந்து, 2ம் சுற்றுக் கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். மேலும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்யலாம். கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்கள் விவரம் ஆகஸ்ட் 18ல் வெளியிடப்படும். மாணவர்கள் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.
மேலும் 3ம் சுற்றுக் கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை பதிவு செய்யலாம். செப்டம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையில் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்யலாம். கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்கள் விவரம் செப்டம்பர் 8ல் வெளியிடப்படும். மாணவர்கள் செப்டம்பர் 10ம் தேதி முதல் 18ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.
அதனைத்தொடர்ந்து ஸ்டே வேகன்சி கலந்தாய்வு செப்டம்பர் 21 முதல் 23ம் தேதி வரையில் பதிவு செய்யலாம். அதன் பின்னர் மாணவர்கள் விரும்பும் கல்லூரியை 22ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் பதிவு செய்ய முடியும். மேலும் 25ம் தேதி மாணவர்களுக்கு தற்காலிக இட ஒதுக்கீடும் வழங்கப்படும். 26ம் தேதி கல்லூரிகளின் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு அளிக்கப்படும்.
மாணவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். அவ்வாறு இறுதி சுற்று கலந்தாய்வில் இடத்தினை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரியில் சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வினை எழுதுவதற்கு தடைவிதித்தும், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குத் தடை" விதித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Monsoon session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!