இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் 2020 - 2021ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட்தேர்வு மே மாதம் 3ஆம் தேதி நடைபெறுகிறது. தேசிய முகமை நடத்தும் இந்தத் தேர்வுக்கு www.nta.ac.in / www.ntaneet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் டிசம்பர் 2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 31ஆம் தேதி கடைசி நாள் என்பதால் 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்கு ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.
மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததைச் சரிபார்ப்பதற்கு ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 720 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4 ம் தேதி வெளியிடப்படுகிறது. 2018ஆம் ஆண்டு நீட் தேர்வு 11 மாநில மொழிகளில் நடத்தப்பட்டாலும், அதற்கான தகவல் கையேடு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டன.
ஆனால், தற்பொழுது தமிழ் உள்ளிட்ட 11 மாநில மொழிகளில் இதற்கானத் தகவல் கையேடு வெளியிடப்பட்டுள்ளன. 17 தலைப்புகளில் மாணவர்களுக்கான அனைத்து விபரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் தங்களுக்கான தேசிய தேர்வு முகமையின் தகவல் கையேட்டினை https://ntaneet.nic.in/ntaneet/Welcome.aspx என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவர்களும், பெற்றோர்களும் அவர்களுக்கான தகவல் கையேட்டினை முழுமையாகப் படித்து தெரிந்து கொண்டால் மட்டுமே இது பயனுள்ளதாக அமையும். மாணவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எத்தனை மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்ற விபரம் ஜனவரி முதல் வாரத்தில் தெரிய வரும் என தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முகமை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒ.பி.சி.பிரிவினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு
அகில இந்திய இட ஒதுக்கீட்டு கொள்கை இளங்கலை மருத்துவப்படிப்பிற்குப் பொருந்தும். அதன்படி பொது பொருளாதார ரீதியாக உயர்ந்த வகுப்பு பிரிவினருக்கு 10 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பட்டியலினத்தவருக்கு 15 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு இடங்களும், கிரீமி லேயர் அல்லாத பிரிவைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
தவறாக இடம் பெற்றுள்ள தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்கக முகவரி
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டு அறிந்து கொள்வதற்கு, அந்தந்த மாநில மருத்துவக் கல்வி இயக்கங்களின் விபரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை, சுகாதார சேவை இயக்குநரகம், 359, தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரியும், தொடர்பு எண்களும் அளிக்கப்பட்டிருந்தன. அதனை மாற்றாமல் இந்த ஆண்டும் அதே தவறினை செய்துள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கையின் பொழுது பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. அது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமையைத் தொடர்பு கொண்டது. ஆனாலும், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள் மாற்றம் செய்யாமல் உள்ளதால் மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்!