நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவப்படிப்பில் சேர்ந்ததாக மாணவர் உதித் சூர்யா என்பவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கல்லூரி முதல்வர் அமைத்த விசாரணைக்குழுவில் ஆள்மாறாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மன உளைச்சல் காரணமாக தன்னால் படிப்பை தொடர முடியவில்லை என்று கடிதம் அனுப்பிவிட்டு மாணவர் உதித் சூர்யா தலைமறைவாகினார்.
இதனிடையே உதித்சூர்யா மீது கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவரை பிடிப்பதற்காக சிறப்பு தனிப்படை அமைக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மாணவர் உதித் சூர்யாவை தேடி வந்த நிலையில் அவரது பெற்றோரும் தலைமறைவாகினர். இதையடுத்து நேற்று முன்தினம் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மாணவர் உதித்சூர்யாவை ஆந்திர மாநிலம் திருப்பதியில் வைத்து தேனி சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருப்பதி அடிவாரத்தில் மாணவர் உதித் சூர்யா அவரது தந்தையான சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் வெங்கடேசன், தாய் ஆகியோருடன் கைது செய்யப்பட்டார். இவர்களை சென்னைக்கு கொண்டுவந்து சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் சிறப்பு தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஆள்மாறாட்டத்திற்கு உதவியவர்கள் யார் என்ற திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் ஆள்மாறாட்ட விவகாரம்; மாணவர் உதித் சூர்யா சிபிசிஐடி முன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு