நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சட்ட விரோதமாக மாணவர் உதித் சூர்யா தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக கூறி தேனி கண்டமனுர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உதித் சூர்யா சார்பில் முன் பிணைக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பின்னர் மாணவர் உதித் சூர்யா அவரது தந்தை உள்ளிட்டோரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கின் கடந்த விசாரணையின் போது உதித் சூர்யாவின் முன் ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த ஜாமீன் வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேனி நீதிமன்றதில் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மாற்றினால், உதித் சூர்யாவுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் மேலும் உதித் சூர்யா ஜாமீன் கோரிய வழக்கை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:நீட் பயிற்சி மையத்தில் ஐ.டி. ரெய்டு... முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்!