நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் மற்றும் அவரது தந்தை ரவிக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தாங்கள்(நீதிபதி) கூறியபடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி நடந்த விவரங்களைக் கூறினேன் எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி முன்ஜாமீன் கோரிய ரவிக்குமாரை நேரில் அழைத்து விசாரித்தார். பின்பு அரசு தரப்பில், மாணவனின் விரல் ரேகை, நீட் தேர்வில் பங்குபெற்றவரின் விரல் ரேகையுடன் ஒத்துபோகவில்லை. இதன் மூலம் ஆள்மாறட்டம் நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்காக தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதற்கு இதுவே ஒரு உதாரணமாகும். இருந்தாலும் மாணவரின் வயதை கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது.
அதன்படி நாள்தோறும் காலை 10.30 மணிக்கு மதுரையில் உள்ள சிபிசிஐடி விசாரணை அலுவலர் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதே நேரத்தில் மாணவரின் தந்தை ரவிக்குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும், தொடரந்து 60நாட்கள் ரவிக்குமார் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் எனவும், 60நாட்கள் முடியும் வரை ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க;நீட் ஆள்மாறாட்ட வழக்கு - பிரவீனின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்