இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் உபரித் தொகையிலிருந்து 57 ஆயிரத்து 128 கோடி ரூபாயை கொடுப்பதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், ஏழை, நடுத்தர மக்களுக்காக உதவிசெய்ய முன்வருவது மிகப்பெரிய சவால் அல்ல என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநர் மனதில் கொள்ள வேண்டும்.
"வங்கிகளில், தனிநபரும், நிறுவனங்களும் பெற்ற கடனுக்கான தவணை தொகையை (EMI) செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது” என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாக வரும் செய்திகள், கரோனா பேரிடரில் வேலையிழந்தவர்களுக்கும், ஊதிய குறைப்புக்கு உள்ளாகியுள்ளோருக்கும், தொழில் முடங்கிப் போயிருக்கும் நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
’கரோனாவால் இந்திய பொருளாதாரம் நொறுங்கிப் போன நிலையில் இருக்கிறது. தடுக்க முடியாமல் கரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் பழக்கம் வாடிக்கையாளர்களுக்கு மறந்து போகும். வங்கிகளின் நிதி நிலைமையையும் பாதிக்கும்’ என்றெல்லாம் இட்டுக் கட்டிய காரணங்களைத் தேடித் தேடிச் சொல்வது, பேரிடர் கால நிர்வாகத்தில் ஏற்றுக் கொள்ள இயலாதவை.
ஆகவே கரோனா கால ஊரடங்கு என்ற ஒரு கண்ணோட்டத்துடன் மட்டும் இதைப் பார்க்காமல்; ஊரடங்கையும் தாண்டி ஒவ்வொருவரின் கைகளில் இருக்க வேண்டிய 'ரொக்கப் பணம்' அல்லது 'வருமானம்' என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்கிறது என்பதை உள்மனதில் வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும்.
கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த ஏற்கனவே ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திட வேண்டும். அப்படி நீட்டிக்கப்பட்ட காலங்களுக்கு உரிய வட்டித் தொகை, அபராத வட்டி போன்றவற்றை வசூலிக்காமல், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க முன்வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகிய இருவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
'பிசினஸ் ஸ்டாண்டர்டு' நடத்திய காணொலிக் காட்சியில் ஆகஸ்ட் 27ஆம் தேதி உரையாற்றிய ரிசர்வ் வங்கி ஆளுநர், 'லியோ டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் (War and peace)' என்ற நூலினை மேற்கோள் காட்டி, “வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானமாகச் செயல்படுபவர்களால்தான் கரோனா போராட்டத்தில் வெற்றி பெற முடியும்” என்று பொருத்தமாகவே பேசியிருக்கிறார்.
ஏழை, நடுத்தர மக்களும், சிறு - குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் அப்படிப்பட்ட வெற்றியை பெற்றிடவே கரோனா காலத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நேசக்கரம் நீட்டிட வேண்டும். சமீபத்தில் தனது 584ஆவது நிர்வாகக்குழுக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் உபரித் தொகையிலிருந்து 2019-20ஆம் ஆண்டிற்கான 57,128 கோடி ரூபாயை கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கும் ரிசர்வ் வங்கி, ஏழை, நடுத்தர மக்களுக்காக உதவிசெய்ய முன்வருவது மிகப்பெரிய சவால் அல்ல என்பதையும் ரிசர்வ் வங்கி ஆளுநர் மனதில் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:முதலமைச்சர் சார் நீங்க வேறலெவல் சார் - பொங்கி எழுந்த பொறியியல் மாணவர்!