சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து சிறப்பு விமானம் வந்தது. அந்த விமானத்தில் பெருமளவில் தங்கம் கடத்தி கொண்டு வருவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனால், சுங்கத்துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனர். அதில், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த சென்னையை சேர்ந்த பர்கத் பாஷா (36), சக்லா சர்தார் (55), கடலூரை சேர்ந்த சாகுல் அமீது (39), சேலத்தை சேர்ந்த சையத் அகமது (26), ராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த முகமது பைசூல் (24), ராமநாதபுரம் பாசிப்பட்டிணத்தை சேர்ந்த ஆதாம் (41) ஆகிய 6 பேரை நிறுத்தி விசாரிக்கையில் முன்னுக்கு பின் முரணாக பதில் தந்ததால் உடமைகளை சோதனை செய்தனர்.
அதில் கருப்பு நிற டேப் ஒட்டப்பட்ட 2 பார்சல்கள் இருந்தன. அதை திறந்து பார்க்கையில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 6 பேரிடம் இருந்து ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 700 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
அதேபோல், துபாயிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தை அலுவலர்கள் சோதனையிட்டபோது, விமானத்தில் ஒரு இருக்கையின் அடியில் 2 பார்சல்கள் இருப்பது தெரியவந்தது. அதை பிரித்து பார்க்கையில் 1 கிலோ 300 கிராம் தங்க கட்டிகள் இருந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 67 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனக் கணக்கிட்டுள்ளனர்.
சுங்கத் துறைக்குப் பயந்து தங்க கட்டிகளை விமானத்தில் வைத்துவிட்டு சென்று விட்டார்களா அல்லது ஊழியர்கள் உதவியுடன் கடத்தல் அரங்கேறியதாக தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஒரே நாளில் இரண்டு கோடியே ஆறு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.