சென்னை: பேருந்து நிழற்குடைகள், மாநகராட்சிக் கட்டடங்கள், பாலங்கள், தெருப் பெயர் பலகைகள் உள்ளிட்ட பொது இடங்களில், சுவரொட்டிகளால் மாநகரின் அழகு சீர்குலைந்து வருகிறது. இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நேற்று (ஜூலை 12) ஒரே நாளில் 620 தெருக்களில் மொத்தம் 11 ஆயிரத்து 551 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
"வடசென்னைப் பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 1,298 சுவரொட்டிகளும், மத்திய சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 660 சுவரொட்டிகளும், தென்சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 9,593 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளன.
5 நாட்களில் சுமார் 33 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றம்
அதேபோல் கடந்த 5 நாட்களில் வடசென்னையில் 7,033 சுவரொட்டிகள், மத்திய சென்னை பகுதியில் 8,163 சுவரொட்டிகள், தென்சென்னைப் பகுதியில் 17,636 சுவரொட்டிகள் என மொத்தம் 32,832 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
இதே நிலை தொடருமானால், சுவரொட்டிகள் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அது குறித்து மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
மாநகராட்சியின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.