சென்னை: தமிழ்நாட்டில் பஞ்சமி நிலங்களை மீட்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருப்பதாகப் பட்டியலின வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹல்தார் கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 3 நாள்களாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தேன். அதைத்தொடர்ந்து, தலைமைச் செயலாளர், துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் காவல் துறைத் தலைவருடன் ஆய்வு செய்தேன்.
பஞ்சமி நிலத்தை மீட்க நடவடிக்கை
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை சந்தித்துப் பேசினேன். தமிழ்நாட்டில் பட்டியலின வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான சட்டம் விரைவில் கொண்டுவரப்பட்டு, அந்த நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என உறுதி அளித்தார்.
தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. அதில் சுமார் 40,000 ஏக்கர் பஞ்சமி நிலத்தை வேற்றுப் பிரிவினர் அல்லது தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாகப் பயன்படுத்தி வருகின்றன.
முதலமைச்சர் உறுதி
வன்கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.8.25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை, 3 ஏக்கர் விவசாய நிலம் போன்றவை வழங்கப்பட வேண்டும். இதேபோல் தமிழ்நாட்டில் பட்டியலின வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள 3,000 அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் பழங்குடியின மாணவி வெற்றி!