சென்னை: சித்த மருத்துவ முறையில் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு மையமாக விளங்கும் சென்னை சித்த மருத்துவ நிறுவனத்துடன் (National Institute of Siddha - NIS) சென்னை ஐஐடி இணைந்து பயிற்சி, ஆராய்ச்சி, மருத்துவ ஆய்வுகள் போன்றவற்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
புதிய பாடத்திட்டங்களை கூட்டாக மேம்படுத்துதல், மருத்துவ ஆராய்ச்சி, மூலக்கூறு உயிரியல் மற்றும் ஆய்வக செல்வரிசை ஆராய்ச்சி, சுகாதார அமைப்பு ஆராய்ச்சி உள்ளிட்டவைகளை செயல்படுத்துதல், ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மீனா குமாரி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், ”இந்திய மருத்துவத்தில் சித்தா மிக முக்கிய மருத்துவமாகும். சித்த மருந்துகளின் செயல்திறனை விளக்கும் அறிவியல் அடிப்படையை உருவாக்க இந்த ஒப்பந்தம் பயன்படும்.
கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், வெப்மினார்கள், மாநாடுகள், பாடத்திட்டங்களைத்தொடருதல், தொடர் மருத்துவக் கல்வி (CME) உள்பட கல்வித்திட்டங்களை உருவாக்குதல் ஆகியப்பணிகளை இரு கல்வி நிறுவனங்களும் கூட்டாக மேற்கொள்ளும்.
கற்பித்தல் மற்றும் பயிற்சிக்கான மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களை இந்த ஒப்பந்தத்தில் பரிமாறிக்கொள்ளப்படும்” எனத்தெரிவித்தார்.
இதுகுறித்து தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர். மீனா குமாரி கூறும்போது, ”சித்த மருத்துவத்தில் உள்ள அளப்பரிய சிகிச்சைத் திறனைப்பரிமாறிக் கொள்ளவும், சித்த மருத்துவத்தின் தன்மைகளை அறிவியல் ரீதியாக சரிபார்க்கவும், அதன் உயிரியக்க மூலக்கூறு மற்றும் செயல்படும் முறைகளை சென்னை ஐஐடியின் அதிநவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக்கண்டறியவும் இந்த ஒப்பந்தம் புதிய வழிகளை ஏற்படுத்திக்கொடுக்கும்.
மேலும் மூலிகை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய முக்கியத்துறைகளில் மாணவர்களின் திறமை அதிகளவில் வெளிப்படும். பாரம்பரிய மருத்துவ முறைகளை தொழில் நுட்ப ரீதியாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இக்கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைக்கும். சித்த மருத்துவ முறையையும் மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.