சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், நேற்றும் நேற்று முன்தினமும் பட்டியலினத்தவர், பழங்குடியின மக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் வன்கொடுமை தடுப்புச் சட்டதின் கீழ் பதிவு செய்யப்பட்டு தீர்வு எட்டப்படாத வழக்குகள் குறித்தும் தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான எச்எல்.தத்து தலைமையில் நடந்தது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த எச்எல்.தத்து, " இந்த விசாரணையில் 179 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறை விசாரணையின் போது கால் உடைக்கப்பட்ட நபரின் வழக்கு , மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி, அலகு குத்தி பிராத்தனை செய்த 20 குழந்தைகளின் வழக்கு ஆகிய இரு வழக்குகளுக்கும் சேர்த்து 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது".
மேலும் காவல்துறை விசாரணையின் போது 91 குற்றவாளிகளின் கை எலும்புகள் உடைக்கப்பட்டது குறித்து மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு, ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிப்பதாக உறுதியளித்துள்ளது-இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை விவகாரம், மாற்றுத்திறனாளிக்களுக்கான சட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் இருப்பது, காவல்துறையின் மோசமான நடவடிக்கைகள், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், சொந்த மாநிலம் விட்டு வேறு மாநிலத்தில் பணிக்கு செல்பவர்கள் சந்தித்கும் பிரச்னைகள், பட்டியலின மாணவர்களுக்கு மறுக்கப்படும் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
1) பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு புணர்வாழ்வளிக்க வேண்டும்
2) மகளிர் விடுதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
3) நகர்ப்புற கழிவுகளை அகற்றுவதில் மேம்பாடு வேண்டும்.
4) விழுப்புரத்தில் வாழும் ஏழை பழங்குடியினருக்கான குடியிருப்புகள் மேம்படுத்த வேண்டும்.
5) ஜவுளிக் கடைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும்.
6) கொத்தடிமைகளாக இருப்பவர்களை மீட்டு புணர்வாழ்வளிக்க வேண்டும்.
7) சிலிகோசிஸ் நோய் ஏற்படும் துறைகள் தடுப்பு, கண்டறிதல், புணர்வாழ்வளித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.