மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
எட்டு மாதங்களாக இந்தப் பரிந்துரை மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எட்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்துத்தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும், ஆளுநருக்கு சட்டப் பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியாது என்றும் வாதிட்டார்.
7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் மனுதாரர் உள்ளிட்ட ஏழு பேரும் பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படும் எனவும் நளினி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அவருக்கு சட்டப் பாதுகாப்பு இருப்பதாகவும் வாதிட்டார். மேலும், 7 பேர் விடுதலை விவகாரத்தைப் பொறுத்தவரை அது ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் உத்தரவிட்டு, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.