சென்னை: தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை மூடி மறைத்து விட்டு ஏழைகள் மடியில் கை வைக்கும் வகையிலான பட்ஜெட்டை தான் தமிழக அரசு தாக்கல் செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே பாண்டியராஜன் விமர்சித்து உள்ளார். தமிழ்நாடு நாடார் சங்கம் உள்பட நாடார் சங்கங்கள், ஆர்.எஸ். பாரதி வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டன. பெருந்தலைவர் காமராஜர் குறித்தும், நாடார் சமுதாய பெண்களை பற்றி இழிவாக பேசியதற்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டது. 200 ஆண்டுகளாக தோள் சீலை போடுவதற்கு போராடிய நாடார் பெண்களுக்கு ஜாக்கெட் போட அனுமதி பெற்று தந்தது திராவிடம் என்று பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதியை திமுகவில் இருந்து நீக்க கோரியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஆலந்தூர் நீதிமன்றம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார். தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 300-க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து ஆலந்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
முன்னதாக தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ. முத்து ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாடார் சமுதாய பெண்கள் தோள் சீலை அணியாமல் இருந்த போராட்டம் 1823ஆம் ஆண்டில் தொடங்கி 1859ஆம் ஆண்டு முடிந்தது. பாதிரிமார்கள், அய்யா வைகுண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வரலாற்றை பொய்யாக பேசிய ஆர்.எஸ். பாரதி மீது பெண் வன்கொடுமை உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். திமுகவில் இருந்து நீக்க வேண்டும்.
ஆர்.எஸ். பாரதி நாடார்களை கொச்சைப்படுத்தி உள்ளார். வரலாற்றை படிக்காமல் பெண்களை இழிவுப்படுத்தி உள்ளார். திராவிட கட்சிகள் வந்த பின்னர் சேலை அணித்தது போல் பேசி உள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் அதை எதிர்த்து போராடியது நாடார் சமுதாயம். ஆர்.எஸ். பாரதி மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மா.பா. பாண்டியராஜன், “திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி பல்வேறு சமூகங்களைத் தொடர்ந்து அவதூறாக பேசி வருகின்றனர். நாடார் சமுதாய பெண்கள் குறித்து வரலாறு பற்றி தெரியாமல் பேசுகிறார். தோள் சேலை போராட்டத்தில் திமுக, நீதிக்கட்சி தொடர்பு கிடையாது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், ஒட்டு மொத்த ஏழை மக்களின் மடியில் கை வைக்கும் பட்ஜெட் எனக் விமர்சித்தார். தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி பற்றாக்குறை மூடி மறைத்துவிட்டு, இந்த பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே பாண்டியராஜன் குற்றம் சாட்டினார்.
இதேபோல் கடந்த வாரம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவதூராக பேசியதாக பாஜகவினர் ஆர்.எஸ். பாரதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராகுல் காந்தியின் பதவி பறிப்பு.. எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்..