சென்னை சைதாப்பேட்டை ஜோதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. சென்னை மாநகராட்சியில், இவர் தந்தை வேலை பார்க்கும்பொழுது இறந்ததால் கருணை அடிப்படையில், ஜெயாவிற்கு மாநகராட்சியில் வேலை கிடைத்துள்ளது. குடும்ப பிரச்னை காரணமாகக் கணவரை விட்டுப் பிரிந்து தனியாக இங்கு வாழ்ந்து வரும் ஜெயா, கணவர் இறந்த பிறகு தன்னுடைய குழந்தையையும் கணவர் வீட்டிலேயே கொடுத்துவிட்டு தனியாக வாழ்ந்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக, அவரது மூத்த சகோதரி தேவி என்பவர் அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார். ஜெயா மாநகராட்சி ஊழியராக இருக்கும்போது உயிரிழந்துள்ளதால், நிவாரணம் பெறுவதற்காக ஜெயாவின் சகோதரர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உடல் கூறாய்வு முடிந்த வீட்டிற்கு வந்த பிறகு, சொத்து தகராறு காரணமாக உறவினர்களிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. முன்னுக்குப்பின் முரணாகத் தேவி பேசியதால் அங்கு வசிப்பவர்கள், சந்தேகமடைந்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காவல் துறையினர் விசாரணைக்கு வந்தபோது தேவி மயக்கமடைந்து சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து ஜெயா வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தும், அருகிலிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த காட்சியில் , ஞாயிறு நள்ளிரவு இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஜெயாவின் வீட்டிற்கு வந்தது தெரியவந்துள்ளது.
எனவே ஜெயா கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற அடிப்படையில் தற்போது விசாரணையை காவல் துறையினர் நடத்திவருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது உறுதியாகத் தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.