ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த குமாரவலசு பகுதியைச் சேர்ந்த விவசாயி ராவுத்குமார்(32). இவரது மனைவி திவ்யபாரதி (24). இவர்கள் இருவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். நேற்று முன்தினம்(மே.20) ராவுத்குமார் தோட்டத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த போது, படுக்கையில் திவ்யபாரதி உடலில் காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்க்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
திவ்யபாரதியின் மரணம் குறித்து அவரது தந்தை நடராஜன்(62) சிவகிரி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், திவ்யபாரதி திருமணத்திற்கு முன்பு பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், தனது மகளுக்கும் அவரது கணவருக்கும் திருமணம் முடிந்த சில நாட்களிலே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு எழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதனை கேட்கச் சென்ற எனது மகன், மனைவி கண்முன்னே மகளை ராவுத்குமார் தாக்கியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். தனது மகளை கொலை செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அந்தப்புகாரில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சிவகிரி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடை உரிமையாளரை கட்டி போட்டு ரூ.50 லட்சம் கொள்ளை!