சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'என்னை திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
பொதுவாக மாற்று கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் சேர்ந்த பின் பதவி கொடுப்பது இயல்பு தான். 'மாற்றான் தோட்ட மல்லிகைக்கும் மணம் உண்டு' என்ற அண்ணாவின் வாக்கியப்படி, நல்ல செயல்பாடுகளை வெளிபடுத்தியதற்கு திமுக பதவி வழங்கி வருகிறது.
தமிழ் மொழி, தமிழ் இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது கொள்கை. திமுக தலைவர் ஸ்டாலினும் இதே கொள்கையைத் தான் பின்பற்றி வருகிறார்.
அமைச்சர் ஜெயக்குமார் குறித்த கேள்விக்கு பதிலளித்த தங்க.தமிழ்ச்செல்வன், ஆடு நனைகிறதே என்பதற்காக ஓநாய் கவலைப்படுவது போல் அமைச்சர் ஜெயகுமாரின் கருத்து உள்ளது. திமுகவில் பதவி வழங்கியதற்கு அதிமுகவைச் சேர்ந்தவர் ஏன் வருத்தப்படவேண்டும். அவர் வகிக்கும் பதவிக்கு இது அழகு அல்ல.
மேலும் பேசிய அவர், " முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றுள்ளதன் பின்னணியில் மர்மம் உள்ளதாக எனக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. அத்தகவல்களின் உண்மைத் தன்மை அறிந்த பின் ஊடகங்களிடம் பகிர்கிறேன்" என்றார்.