சென்னை: இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காணாமல் போனதாகவும் அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் புலம் பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பு அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பஹ்ரைன் கடற்பகுதியில் இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காணவில்லை என்று கூறி புலம் பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய தமிழ்நாடு வீட்டுவேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை செயலாளர் வளர்மதி, "பஹ்ரைன் கடற்பகுதியில் 2 இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களான ஆண்டனி ஜார்ஜ்வின் சென்ட் மற்றும் சகாய செல்சோ ஆகியோர் கடந்த வருடம் அக்டோபர் 17ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவர்களது குடும்பத்தினர் எங்கல் உதவியை நாடினர்.
மீன்பிடிக்கச் சென்ற இருவரும் இன்று வரை வீடு திரும்பவில்லை. அவர்களின் முதலாளியும் இருவரையும் கண்டுபிடிக்க விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளார். பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகமும் காணாமல் போன தொழிலாளர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. SIRAF ராணுவ முகாமில் உள்ள ஈரான் கடலோர ராணுவ படை காணாமல் போன தொழிலாளர்களை அழைத்துச் சென்றதாக வயர்லெஸ் கருவிகள் மூலம் செய்தியைக் கேட்டதாகக் ஈரானில் உள்ள உள்ளூர் மீனவர்கள் கூறினர்.
படகு ஒன்று கடலில் மிதப்பதைக் கண்டதாகக் சில ஈரானிய மீனவர்கள், அத்தொழிலாளர்களின் குடும்பங்களிடம் கூறியுள்ளனர். காணாமல் போன தொழிலாளர்களின் குடும்பங்கள், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவும், அப்புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் (பஹ்ரைன் மற்றும் ஈரானில் உள்ள தூதரகங்கள், CM Cell மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர்) வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால், அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதில் உதவிக்காக பஹ்ரைன் மற்றும் ஈரானில் உள்ள மற்ற மீனவர்கள் மற்றும் சமூக சேவையாளர்களையும் குடும்பத்தினர் அணுகியுள்ளனர். ஆண்டனி ஜார்ஜ்வின் சென்ட் மற்றும் சஹாயா செல்சோ ஆகியோரின் குடும்பத்தினர் அவர்கள் இருக்கும் இடத்தைப் பற்றி அறிய உதவும் எந்த தகவலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரசாங்கம் தேவையான நடவடிக்கை எடுத்து, துன்பத்தில் உள்ள இரண்டு புலம்பெயர் தொழிலாளர்களை மீட்டெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதோடு மட்டுமல்லாமல் புலம்பெயர்தொழிலாளிகள் ஏஜெண்டுகளால் பணம் பறிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். போலி ஏஜெண்டுகள் வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு அப்பாவி தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பாமல் ஏமாற்றி வருகிறார்கள்.
இப்பிரச்சனையையும் அரசு கவனத்தில் கொண்டுவர வேண்டுகிறோம். அவர்கள் முதலாளிகளுக்கு எதிராக கொடுத்த புகார்களுக்கு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஊதியத்தையும், சலுகைகளையும் பெறப்படவில்லை. இதற்கும் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்" என கூறினார்.
இதையும் படிங்க: 30 ஆண்டுகளாக தொடரும் வாச்சாத்தி வழக்கு.! நேரடி விசாரணையில் நீதியரசர்..