சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் பாராட்டு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வரவேற்புரை ஆற்றிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உச்ச நீதிமன்றத்தின் கிளையைத் தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், எவ்வளவு சிக்கலான வழக்காக இருந்தாலும் எளிதில் தீர்வு காணக்கூடியவர் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் எனப் பாராட்டு தெரிவித்தார்.
பார் கவுன்சில் உறுப்பினரான ஆர்.விடுதலை பேசியபோது, "சுற்றுச்சூழல் பாதுகாப்பின் காவலர் என அனைவராலும் போற்றப்பட்டவர் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்" என்றார்.
இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன் பேசியபோது, "சச்சினும், கோலியும் சேர்ந்த ஒரு மனிதராக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வழக்குகளை கையாண்டார். நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பார் கவுன்சில் எப்போதும் தயங்காது" என உறுதியளித்தார்.
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் பேசியதாவது, "வழக்கறிஞர் சமூகம் கற்று தங்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பல்வேறு தீர்ப்புகளை வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன், கூடுதல் நீதிபதியாக பதவியேற்றவுடன் நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் இருந்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது" என்றார்.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பேசியபோது, "இளம் நீதிபதிகளுக்கு கற்றுக்கொடுப்பதுடன், தீர்ப்புகள் எழுதவும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஊக்குவித்தார். MMS என்பதை Man of Marvelous Sundresh என்பது தான் சரியாக இருக்கும்" என்றார்.
நீதிபதி என்.சேஷசாயி பேசியபோது, "பின் வாசல் வழியாக வந்த ஆங்கிலம், முன் வாசலில் தமிழை மறக்கத் தொடங்கிவிட்டது. பதவி என்னும் உடையை மாட்டிக்கொண்டு கழற்ற மறுப்பவர்கள் உள்ள நிலையில், அந்த உடையை அணிந்திருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாதவர் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்" என்றார்.
நீதிபதி என்.சதீஷ்குமார் பேசியபோது, "அனைத்து துறை சார்ந்த வழக்குகளிலும் முக்கிய தீர்ப்புகளை வழங்கி நீதித்துறையும், வழக்கறிஞர்களும் பலனடைய உதவிபுரிய வேண்டும்" என்றார்.
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியபோது, "நீதிபதி என்பதைத் தாண்டி மனிதம் என்ற உள்ளார்ந்த பண்பின் அடிப்படையில் மனிதராக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கொண்டாடப்படுவார். அவர் நேசிக்கும் தமிழ் கூறும் அறத்தையும், நீதியையும் கற்றுக்கொண்டு பேசுவதுடன் நிறுத்திவிடாமல் வாழ்விலும் பின்பற்றுபவர்.
தன்னுடன் 2009-ல் பதவியேற்றவர்களை எப்படி சகோதரனாக நினைத்தாரோ, அதேபோலத்தான் சமீபத்தில் பதவியேற்ற இளம் நீதிபதிகளையும் சகோதரத்துடன் பழகுவார்" என்றார்.
நீதிபதி வி.பாரதிதாசன் பேசியபோது, "மன எண்ணங்களுக்கு ஏற்ற உயர்வு, பிறருக்கு தீங்கிழைக்கக்கூடாது போன்ற வள்ளுவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், மேலும் மேன்மையடைய வேண்டும்" என்றார்.
நீதிபதி டி.ராஜா பேசியபோது, "சிறந்த தமிழாற்றல், சிறந்த நீதிபதி, சிறந்த மனிதநேயம் ஆகியவைதான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக எம்.எம்.சுந்தரேஷ் உயரக் காரணம். ஒன்றிய அரசும் , ராணுவமும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று செயல்பட வேண்டிய நிலையில், குடியரசுத் தலைவருக்கு எழும் சட்டச் சிக்கல்களை போக்கக்கூடிய உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்" என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். விழாவில் ஏற்புரையாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், டெல்லியில் உள்ள குளிரைக் காட்டிலும், இங்குள்ள பாச மழையால் உடல் நடுங்குவதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், வழக்கறிஞர்கள் தவறிழைத்தாலும் நீதிபதிகள் கோபப்படக்கூடாது, பதவியில் இருக்கும்போது செருக்கில்லாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிபின் ராவத் உள்ளிட்டோரை மீட்ட தீயணைப்புத் துறையினரின் துயரம் - செவிசாய்க்குமா அரசு?