சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பிரபலமான ஹோட்டல் குழுமங்களில் ஒன்றான முருகன் இட்லி கடைக்கு பல்வேறு கிளைகள் இருக்கின்றன. இந்த நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடையில் உணவில் புழு இருப்பதாக பிரபாகரன் என்பவர் வாட்ஸ் ஆப் மூலம் கொடுத்த புகாரின் அடிப்படையில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் உணவு தயாரிக்கும் கூடத்தில் கடந்த ஏழாம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்த உணவுகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அதில் சரியான சுத்தம் கடைப்பிடிக்காமல் இருப்பது தெரியவந்தது.
அத்துடன் பூச்சிக் கட்டுப்பாடு முறையும் சரியாகப் பின்பற்றவில்லை எனவும், உணவு தயாரிப்பவர்கள் தகுந்த மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை என்பதையும் அலுவலர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அந்த குறிப்பிட்ட முருகன் இட்லி கடை கிளையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.