இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும்.
அதுவும், தமிழர்களுக்கு அது குறித்து நினைத்த மாத்திரத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு கண்களுக்கு முன்னால் வந்து நிற்கும். அத்தகைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாத வடுக்களோடு வலிகளைத் தாங்கி நிற்கிற தமிழினத்திற்கு கூடுதலாக இன்னுமொரு வார்த்தை நினைவில் வந்துபோகும் அதுதான் பசிப்பட்டினி!
2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 19 ஆம் தேதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது.
ரசாயனக்குண்டுகள், கொத்துக்குண்டுகள், ஷெல் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் நடத்தப்பட்ட இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘இனப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர்.
விளக்கேற்றி, மெழுகுவர்த்திகள் ஏந்தி, மலர் வணக்கம் செய்து நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இந்தாண்டு‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’என்ற ஊழியின் உணவு வழங்கப்பட்டது.
முன்னமே, சொன்னது போல, முள்ளிவாய்க்கால் என்றால் தமிழினத்திற்கு கூடுதலாக நினைவில் வந்துபோகும் அந்த பசிப்பட்டினியின் குறியீடே இந்த ‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’. இப்போது பேசும் பொருளாக மாறியுள்ள இந்த ‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’தமிழீழ நடைமுறை அரசின் (DeFacto State) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கடைசி உறுப்பினரின் இறுதி மூச்சுவரை வழங்கப்பட்டது.
போர் நடைபெறும் பகுதியில் நிற்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டியது அந்த போரை முன்னெடுக்கும் அரசின் பொறுப்பு. மருத்துவமனைகள் மீதும், மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் மீதும் கொத்துக்குண்டுகளைப் போட்டு கொன்ற சிங்களப் பேரினவாத அரசு இந்த சர்வதேச விதிமுறையை மட்டும் எப்படி கடைப்பிடிக்கும் ?.
மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்த சிங்கள அரசின் திட்டமிட்ட செயல்பாட்டால், பட்டினிச்சாவில் தவித்த மக்களை காப்பாற்றியது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வழங்கிய இந்த ‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’தான்.
சாவின் விளிம்பில் நின்று இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு மக்களின் பட்டினியை போக்க மாத்தளன் பகுதியில் தயாரித்து வழங்கத் தொடங்கிய கஞ்சி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது.
ஆனந்தபுரத்தில் பீரங்கி டாங்கிகளால் தகர்க்கப்பட்ட தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, பிடுங்கப்பட்டதேங்காய்கள், தமிழீழ போராட்ட இயக்கத்திடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு, ஆங்காங்கே கிடைத்த ஊற்று தண்ணீர் இவற்றால் தயாரிக்கப்பட்ட கஞ்சிதான் அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கஞ்சி வழங்கப்பட்டது. பசிப்பட்டினியால் தமது மக்கள் சாகக்கூடாது என்பது அந்தப் போராட்ட இயக்கத் தலைவனின் அதியுச்சக் கட்டளையாக இருந்தது.
சிங்கள ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதிகாலை 2 மணியளவில் தயாரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். அதன்மூலம் தயாரிக்கப்படும் கஞ்சி, 8 மணிக்கு முன்னதாக மக்களுக்கும், ஐ.நா. அலுவலர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன.
மனித நேயமற்ற தாக்குதல்கள், இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் மக்களில் ஒருவர்கூட பட்டினியால் சாகக்கூடாதென தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியது.
உலகில் நடைபெற்ற எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில், மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் நடவடிக்கைகளில் மட்டும்தான் போராளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்ற தமது உயிரைத் துறந்தனர்
பேரிடர் இடப்பெயர்வின் யூதர்கள் அருந்திய ஓர் உணவை “பாஸ் ஓவர்” என இன்றும் வழக்கமாக நடைமுறையிலுள்ளதைப் போல ஈழத்தமிழர்களின் பொடியன்கள் தயாரித்து தந்த அமிழ்தான ‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’வரலாற்றில் நிலைபெறும்.
முள்ளிவாய்க்காலினை பொது பண்பாட்டுக் குறிப்பாக மாற்றும். சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பையும், ஐ.நாவின் கள்ள மெளனத்தையும் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிற தமிழர்களின் எதிர்ப்புக் குறியீடாக வருங்காலத்தில் மாறும் என்பது உறுதி.
“உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ”
- லூக்கா
இதையும் படிங்க : தமிழ் தேசத்தின் சர்வதேச ஊடகப் போராளி - தராக்கி சிவராம்