சென்னை: உத்தமர் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, காமராசர் சாலை முதல் காந்தி மண்டபம் வரை, தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, உலக அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவை குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் மிதிவண்டி பேரணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது, 'உத்தமர் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு வழக்கம்போல், தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள திரு உருவச்சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் மரியாதை செய்தனர்.
உலக அமைதி வேண்டும் என காந்தியடிகள் கண்ட கனவை நினைவு கூரும் வகையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மிதிவண்டி பேரணியைத் தொடங்கி வைத்துள்ளோம். கடந்த சுதந்திரத்தினத்தன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தியடிகள் சிலை திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து சுதந்திரப்போராட்டத் தியாகிகளுக்கும், தமிழ்வழி காவலர்களுக்கும், மறைந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் எப்போதும் அரசும், முதலமைச்சரும் சிறப்பு சேர்க்கும் வகையில் நினைவு இல்லங்களை அமைப்பது, திரு உருவச்சிலைகளை அமைப்பது போன்றவற்றை அரசு தொடர்ந்து செய்து வருகிறது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:காந்தி ஜெயந்தி: ஆளுநர், முதலமைச்சர் மரியாதை