சென்னை: இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் உத்தரவின்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்து செவிலியர்கள் உண்ணாவிரதத்தை முடித்தக் கொண்டனர். இன்று (செப்.26) மாலை கரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் உண்ணாவிரதத்தில் இருந்தவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தை ஏற்றுக் கொண்டதன் முடிவில், இதற்காக இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் தலைமையில் ஒரு உயர் மட்டக்குழு அமைத்து மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக சான்றிதழ் சரிபார்க்கும் பணி மற்றும் இனசுழற்சி முறையும், முதுநிலை முறையை பின்பற்றியும், சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர்மா.சுப்பிரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தபோது இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், இயக்குநர், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை மற்றும் கூடுதல் இயக்குநர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் ஆகியோரும் மற்றும் உதயகுமார் தலைமையில் எம்ஆர்பி செவிலியர்கள் சங்க உறுப்பினர்கள் 5 பேரும் கலந்து கொண்டனர். விரைவில் இவர்களை பணியமர்த்துவதற்கு உடனடியாக ஆவனம் செய்யுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா தொற்றுக் காலத்தில், சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிகமான முறையில் பணி அமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் செவிலியர்களுக்குத் தற்காலிக செவிலியர் பணியில் இருந்து நிரந்தரத் தன்மையுடைய செவிலியர்களாகப் பணி மாற்றம் செய்யப்பட்டது.
மீதம் உள்ள 3 ஆயிரத்து 290 தற்காலிக செவிலியர்களுக்கு, சுமார் 3 ஆயிரத்து 300 காலிப்பணியிடம் இருப்பதால் நிரந்தரத் தன்மையுடைய செவிலியராக மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி இந்த கோரிக்கையை ஏற்று அரசுத் தரப்பில் நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. மேலும், இதற்கான அரசுக் கோப்புகளில் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதலும் அளிக்கப்பட்டது. ஆனால், 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, கரோனா காலத்தில் 3 ஆண்டு காலம் பணி செய்த தற்காலிக செவிலியர்களை தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்தது.
மேலும், இதனை ரத்து செய்யக் கோரி பல்வேறு கட்ட போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அதன் விளைவாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும், அதேநேரத்தில் மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்படும் என்று உறுதி அளித்ததாகவும், ஆனால், எம்ஆர்பி தேர்வினை எழுதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட தங்களுக்கு அத்தகைய பணி ஏதும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் கடந்த ஜூலை 12ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட எம்ஆர்பி கரோனா செவிலியர்கள் உரிய தேர்வு நடைமுறையைப் பின்பற்றி உள்ளனர் எனக் கூறி, வழக்கு தொடுத்த செவிலியர்களுக்கு 6 வாரத்தில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பணி வழங்க வேண்டும் என்றும், திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, நேற்று (செப்.25) முதல் செவிலியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அந்த வகைய்ல், இன்றும் (செப்.26) தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். அப்போது, ஒரு கர்ப்பிணி உள்பட 10 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்ஆர்பி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.. கர்ப்பிணி உள்பட 10 பேர் மயக்கம்!