சென்னை கொளத்தூரை சேர்ந்த எஸ். குருபிரசாத் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயம்பேடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவர் சாலையில் சறுக்கி கீழே விழுந்த நிலையில் பின்னால் வந்த மாநகர அரசுப் பேருந்து குருபிரசாத்தின் இடது கை மீது ஏறி இறங்கியதில் படுகாயமடைந்தார்.
பின்னர் இதற்கு இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் குருபிரசாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ. சாந்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், மனுதாரர் கவனக்குறைவாகவும், வேகமாகவும் வந்ததுடன், இடது புறமாக முந்திச் செல்ல முயன்றபோது சறுக்கி கீழே விழுந்ததால்தான் விபத்து நிகழ்ந்ததாக மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கபட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பஸ் டிரைவர் மீது 80 சதவிகிதம் கவனக்குறைவும், மனுதாரர் மீது 20 சதவிகிதம் கவனக்குறைவும் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மனுதாரருக்கு இழப்பீடாக 26 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வழங்க மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.