வளசரவாக்கத்தில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இந்தத் தொடர் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக வளசரவாக்கம் உதவி ஆணையர் மகிமை வீரன், குற்றப்பிரிவு ஆய்வாளர் அமுதா ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வில், கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் ஒரு நபருடன் ஒரு பெண் சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் அந்த நபர்கள் நகை, பணத்தை திருடிய பிறகு இருவரும் ஒன்றாக செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
மேலும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை பல்வேறு இடங்களில் தீவிரமாக ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு இந்த இருவரும் உள்ளே சென்று வெளியே வருவது போன்று காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து, அங்கு விசாரணை செய்ததில் இருவரும் வேலை கேட்டு வந்ததாகவும் செல்போன் எண்ணை கொடுத்து விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அந்த செல்போன் எண்ணை கண்காணித்ததில் இவர்கள் காரைக்குடி, கலவை பொட்டல் பகுதியைச் சேர்ந்த சாந்தி (44), அவரது மகன் நாகராஜ் (20) என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தாயும், மகனும் வளசரவாக்கம் பகுதியில் தங்கி அங்குள்ள வீடுகள், அலுவலகங்களில் வேலை கேட்டுச்சென்று நோட்டமிட்டு, பின்னர் பூட்டியிருக்கும் வீடு, அலுவலகங்களை உடைத்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.
அவ்வாறு அப்பகுதியிலுள்ள ஒரு அலுவலகத்தில் வேலை கேட்கச் சென்று செல்போன் எண்ணை கொடுத்திருந்ததை தொடர்ந்து அmவர்கள் பிடிபட்டனர் என காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் காரைக்குடி பகுதியில் பல்வேறு கொள்ளை வழக்குகள் பதியப்பட்டிருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்வர்களிடமிருந்து 8 பவுன் நகைகள், ரூ. 75 ஆயிரம் பணம் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் அடுத்தது என்ன? - பரபரக்கும் அரசியல் களங்கள்!