சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகள் தோறும் ஆய்வு மேற்கொண்டு, கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள 2,084 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 954 கொசு ஒழிப்பு நிரந்தரப் பணியாளர்கள், 2,317 ஒப்பந்தப்பணியாளர்கள் என மொத்தம் 3,271 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் 224 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்ப்ரேயர்கள், கையினால் இயங்கும் 229 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கொசுப்புழுக்களை அழிக்க ஒரு வார்டிற்கு கொசுமருந்து தெளிப்பான்களுடன் இரண்டு நபர்கள் என 400 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் நாளொன்றிற்கு ஒரு கி.மீ. தூரத்திற்கு கொசு மருந்து தெளித்தல் மற்றும் ஒரு இடத்தில் வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
247 கி.மீ. நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்க 128 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு ஒரு குழுவிற்கு 3 நபர்கள் நீர் வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் ஆகிய பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
வீடு வீடாக கள ஆய்வு: மாநகராட்சிப் பணியாளர்கள் மூலம் 10,72,410 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 10,052 வீடுகளில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு கொசு ஒழிப்பு மருந்து தெளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவமழை காலம் என்பதால் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் கொசுப்புழுக்கள் வளர வாய்ப்புள்ள இடங்களில் பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றை உடனடியாக அகற்றி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதைத் தடுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர் அதிகம் காணப்படும் இடங்களான கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாதவகையில் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதனப் பெட்டியின் கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு, மொட்டை மாடிகளில் உள்ள மழைநீர் தேங்கும் பொருட்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். வீடுகளில் களஆய்வு மேற்கொள்ள மண்டல சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட மாநகராட்சி அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் வரும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சென்னை மாநராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் புருனஸ் மலர்கள்