சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் நிறுவனத் தலைவர் சேதுராமன், "அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் அதிக அளவில் தங்களின் அமைப்பு உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் நிர்வாகிகள் உள்ளதால், அதிமுகவின் வெற்றிக்கு அனைத்து தொகுதிகளிலும் பாடுபடுவோம். மூன்று தொகுதிகளிலும் அதிமுக சின்னமான இரட்டை இலையில் போட்டியிடுவது என தெரிவித்துள்ளோம்" எனக் கூறினார்.
அதேபோல் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் குடியாத்தம், கே.வி. குப்பம், அணைக்கட்டு ஆகிய தொகுதிகளில் திமுகவைவிட அதிக வாக்குகள் பெற்றுள்ளோம்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பரிசீலித்து வருகின்றனர். மேலும் அதிமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ள" எனத் தெரிவித்தார்.