அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராகவும், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராகவும் வலம் வந்தவர் ஜி.கே. மூப்பனார். 1997ஆம் ஆண்டு தேவ கவுடா அரசு கலைந்தபோது, ஐக்கிய முன்னணியின் சார்பில் மூப்பனாரை பிரதமர் பதவியில் அமர வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், அதனை முற்றிலுமாக நிராகரித்த இவர், இரண்டு முறை தன்னைத் தேடி வந்த மத்திய அமைச்சர் பதவியையும் நிராகரித்தார். இப்படி, வரலாற்றில் பல்வேறு தனித்துவங்களுடன் நினைவுக்கூரப்படும் மூப்பனாரின் 19ஆவது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 30) அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் நாசர் மூப்பனாரின் நற்குணங்களை தற்போதுள்ள அரசியல்வாதிகள் கடைப்பிடிக்க வேண்டும் என வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ஜிகே.மூப்பனார் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு தலைவர். அவருடைய அகராதியில் எதிர்க்கட்சி என ஒன்று இருந்ததில்லை. அனைத்துக் கட்சிகளிலும் அவரது நண்பர்கள் இருந்தனர்.
பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். எளிய மக்கள் குறித்து அதிகம் கவலைப்பட்டவர். அவரது நினைவு நாளில் மற்ற அரசியல் தலைவர்கள் அவரது நற்குணங்களை கடைப்பிடிப்பார்கள் என்றே நம்புகிறேன். மீண்டும் அன்னாருக்கு எனது மரியாதைகளும் வணக்கங்களும், நன்றி” என நடிகர் நாசர் பேசியிருந்தார்.
இதையும் படிங்க:மூப்பனாரை பாஜகவுக்கு தாரை வார்த்த காங்கிரஸ்!