சென்னை அமைந்தக்கரை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாலாஜி என்பவர், ஓம் யாத்ரா என்ற பெயரில் கடந்த ஐந்து வருடமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர், பல புனித தலங்களுக்கு பேக்கேஜ் அடிப்படையில் பயனாளிகளிடம் பணம் வசூலித்து அவர்களை அனுப்பிவைப்பார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக 3000 ரூபாயில் காசி புனித யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாகக்கூறி நூற்றுக்கணக்கானோரிடம் பணம் வசூல் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் உள்ள புனித தலங்களுக்கு அழைத்துச் செல்வதாகக்கூறி பலரிடம் பணம் வசூல் செய்துள்ளார்.
இதனிடையே, காசிக்கு அழைத்துச் செல்வதாகக்கூறிய நாள் நெருங்கியும், பாலாஜி எந்த தகவலையும் பணம் வசூலித்தவர்களிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேமடைந்த பயனாளிகள், நேரில் சென்று பார்த்தபோது, டிராவல்ஸ் அலுவலகம் பூட்டி இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அமைந்தகரை காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தனர். இதை விசாரித்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து பாலாஜியை தேடிவந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாலாஜியை காவல்துறையினர் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.