சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சிங்கார வடிவேல், “களவாணி 2 படத்தின் விநியோக உரிமையை தருவதாகக் கூறி விமல் தன்னிடம் 1.5 கோடி ரூபாய் கடன் பெற்றார். கடனை திருப்பி தராததால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். தற்போது வரை விமல் வட்டியோடு சேர்த்து 2 கோடியே 70 லட்சம் ரூபாய் திரும்பத் தரவேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “கடனை திரும்ப செலுத்துவதற்காக விமல் அளித்த வங்கி காசோலையும் பணம் இன்றி திரும்ப வந்துவிட்டது. அது தொடர்பான வழக்கும் நிலுவையில் இருக்கிறது. இதேபோல் மன்னர் வகையறா படத்தை தயாரிப்பதற்காக தன்னுடைய நண்பர் கோபி என்பவர் மூலம் 5 கோடி ரூபாய் பெற்ற நடிகர் விமல் இதுவரை திருப்பித்தரவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசுகையில், “தன்னுடைய மோசடிகளை மறைப்பதற்கான தவறான புகார்களை காவல் துறையினரிடம் விமல் அளித்திருக்கிறார். பண மோசடிகளில் ஈடுபட்டுவரும் நடிகர் விமல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.