சென்னை: முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு, சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், 47 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நகல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆஜராக உத்தரவு
இந்நிலையில், புகார்தாரர்களின் வாக்குமூலங்களை குற்றம்சாட்டப்பட்ட 47 பேருக்கும் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என். ஆலிசியா முன் இன்று (செப். 20) விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, வாக்குமூலத்தின் நகலை பெறுவதற்காக, அக்டோபர் ஐந்தாம் தேதி நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜி உட்பட இருவருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ‘லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த தகவல் தவறானது’ - கே.சி வீரமணி