சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பண மோசடி செய்ததாக ஹரூன் ரஷீத் என்பவரை சிபிஐ அலுவலர்கள் கைது செய்தனர்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "பல்வேறு பெயர்களில் 5 கோடியே 41 லட்சம் ரூபாய் பணத்தை 4 வங்கிகளில் கடந்த 2014 ஆம் ஆண்டு குற்றவாளி வைத்திருந்தார். இந்திய மதிப்பில் 34 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனத்துடன் போலியான ஆவணங்கள் தயாரித்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்.
அரசின் அனுமதி இருப்பதாகப் போலி ஆவணங்கள் தயாரித்து 57 வியாபாரங்கள் மூலம் சுமார் 3,500 கோடி ரூபாய் பண மோசடி செய்திருப்பதாக அமலாக்கத்துறை ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், வெளிநாடுகளுடன் போலி ஆவணங்கள் மூலம் வணிகம் செய்து இந்தியாவிற்கு நிதி இழப்பையும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவித்த ஹரூன் ரஷீத்துக்கு எப்போதும் பிணை வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த 12ஆவது கூடுதல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருவேங்கட சீனிவாசன், குற்றவாளி ஹரூன் ரஷீத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கோவையில் ஆர்மோனிய பெட்டி வாசித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்!