சென்னை மயிலாப்பூரில் உள்ள ஓர் நகை கடையின் காவலாளி திருநாவுக்கரசு(63). கடந்த 19ஆம் தேதி பணியில் இருந்துள்ளார். அப்போது இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கொடூரமாக தாக்கிவிட்டு சாலையோரங்களில் படுத்திருந்த கன்னியம்மாள், சங்கரன் ஆகியோரையும் தாக்கி கையில் வைத்திருந்த 150 ரூபாயை பறித்துச் சென்று தப்பியுள்ளனர்.
இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். குறிப்பாக அந்தப்பகுதிகளில் குற்றவாளிகளின் முகம், தொப்பி பதிவாகிய அனைத்து சிசிடிவி காட்சிகளையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.
இந்தக் காட்சிகளில் பதிவாகிய தொப்பியை வைத்து, ஐஸ் ஹவுஸ் பகுதியில் பதுங்கி இருந்த சல்மான், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தனபால், சக்திவேல் ஆகிய மூன்று பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் கஞ்சாவிற்கு அடிமையானவர்கள் என்பதும், கஞ்சா வாங்கப் பணம் இல்லாமல் போனால், ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர் போன்ற இடங்களில் இரவு நேரங்களில் சென்று பொதுமக்களை சரமாரியாக தாக்கிவிட்டு பணம், நகை, இருசக்கர வாகனத்தைப் பறித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் இதே போல் கடந்த வாரம் மூதாட்டி ஒருவரை சரமாரியாக தாக்கி, தங்க கம்மலை பிடுங்கிச் சென்றதும் இந்த கும்பல் தான் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் மீது ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஐஸ் ஹவுஸ் போன்ற காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், ஒரு கிராம் மூக்குத்தி, 1000 ரூபாய் பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.