காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தீரர் சத்தியமூர்த்தி மற்றும் ஜி.கே. மூப்பனாரின் பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு தீரர் சத்தியமூர்த்தி சிலைக்கு மாலை அணிவித்தும் அவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ். அழகிரி, ராணுவத்தின் முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதியை நியமிக்கப் போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது ஐனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதற்கான செயல் என்று கூறினார்.
சுதந்திர அமைப்புகளான தேர்தல் ஆணையம், சிபிஐ, தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய கட்டுப்பாட்டில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கொண்டுவந்துள்ளது போல தற்போது ராணுவத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர ஆசைப்படுகிறார்கள் என்று சாடினார்.
அரசாங்கம் என்பது மக்களை மகிழ்ச்சியாக, போர் சூழல் இல்லாமல், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், போர் மிரட்டலை விடுப்பது ஜனநாயகம் ஆகாது என்றும் குறிப்பிட்டார். உலகத்தின் நான்காவது பெரிய ராணுவ பலம் இந்தியாவிற்கு இருக்கிறது என்றும் 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் தான் அந்த பலத்தை நாம் பெற்றோம் எனவும் கே.எஸ். அழகிரி சுட்டிக்காட்டினார்.
நாம் பெற்றுள்ள பலத்தை தற்போது தவறான முறையில் மோடி பயன்படுத்துகிறார் என்றும் இதனை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பால் விலை உயர்வதால் சாதாரண மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், விலை உயர்வு என்பது இரண்டு பக்கம் கூர்மையுள்ள கத்தி போன்றது என்றும் தெரிவித்தார்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அங்கு யார் போட்டியிடுவார்கள் என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் சுதந்திர தினத்தன்று பிரதமர் பேசிய விஷயங்களை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆதரித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதை தான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்த பிறகு பதிலளிக்கிறேன் என்று கூறினார்.