சேப்பாக்கம் வளாகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்திப்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வந்தார்.
ஆனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதியின்றி இன்று காலை முதல் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஊழியர்கள், தேர்வர்களின் அடையாள அட்டையை பரிசோதனை செய்த பின்னரே அவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மாணவர்களை நுழைவு வாயில் அருகில் அழைத்து கமல் ஹாசன் பேசிவிட்டு சென்றார்.
மாணவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ”குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக வருகை தந்தேன். வாக்கு வங்கிக்காக இங்கு வரவில்லை. மத்திய அரசு சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கிறது. ஏற்கனவே சர்வாதிகாரத்திற்கானப் பணிகளை மத்திய அரசு தொடங்கியது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மத்திய அரசிற்கு பேச விருப்பம் இல்லாததால்தான், கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை ஒடுக்குகிறார்கள்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வரும் 23ஆம் தேதி நடக்கவுள்ள பேரணிக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளண. அதில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும். திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை தொலைபேசியில் அழைத்து பேரணியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டம்: எம்ஜிஆர் கலை கல்லூரி மாணவர்கள் போராட்டம்!