நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் மயிலாடுதுறையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தொடர்ந்து தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசினார்.
அப்போது,”ரஜினியின் ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும், சற்று ஏமாற்றமாக இருந்தாலும் என் நண்பன் ரஜினி உடல்நிலை எனக்கு மிகவும் முக்கியம். அவர் எங்கு இருந்தாலும் நலமாக இருக்க வேண்டும் . பரப்புரை முடிந்தவுடன் அவரை நேரில் சந்திப்பேன்" என தெரிவித்தார்.
இதனிடையே, ரஜினி அரசியல் கட்சி தொடங்காததால் மக்கள் நீதி மய்ய தேர்தல் பரப்புரையில் எவ்வித தொய்வும் இருக்காது என அக்கட்சியில் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது,”மக்கள் நீதி மய்யம் தொடங்கியபோது எங்கள் மீது உள்ள நம்பிக்கையில் தொடங்கினோம், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி எனக் கூறியது அந்தச் சூழ்நிலைக்கு கூறிய பதில். தற்போது அவர் உடல்நிலை காரணமாக கட்சி தொடங்கவில்லை என அறிவித்துள்ளார். அதனால் மக்கள் நீதி மய்யத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
முதலில் நாங்கள்தான் பரப்புரையைத் தொடங்கினோம். இப்போது மூன்றாம் கட்ட பரப்புரை நடைபெற்று வருகிறது. கமல் ஹாசன், ரஜினி உடல்நலம் குறித்து கேட்டு தெரிந்துகொள்வார். தற்போது அவரது உடல் நிலை பற்றி மட்டுமே பேசுவார்கள்; வருங்காலத்தில் அரசியல் பற்றி பேச வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:‘என் ரஜினியின் ஆரோக்கியம் முக்கியம்’ -கமல் ஹாசன்