மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது நாள் வேட்பாளர் நேர்காணல் நேற்று (மார்ச் 2) காலை முதல் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி மண்டலங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் கூறுகையில், "தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கமலை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியுள்ளனர். அதுமட்டுமல்லாது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவையும் அளித்துள்ளனர். இளைஞர்கள் மட்டுமே தேர்தலில் மாற்றத்தை கொண்டு வரமுடியும். ஜல்லிக்கட்டில் மாற்றம் உருவாக்கிய இளைஞர்கள் தேர்தலிலும் மாற்றத்தை உருவாக்குவார்கள், எனக்கு அதில் எந்த ஒரு அச்சமும் இல்லை.
இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மையம் தமிழ்நாடு இளைஞர் கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்பதில் உறுதியாக உள்ளது. விரைவில் அவர்களுக்கான தொகுதிகளை அறிவிப்போம்.
நேற்று முன்தினம் (மார்ச்1) 70க்கும் மேற்பட்டோருக்கு நேர்காணல் நடைபெற்றது. இன்று (மார்ச்2) நூறுக்கும் மேற்பட்டோருக்கு நேர்காணல் நடைபெறும். நாளை (மார்ச் 3) 200 நபர்களுக்கு நேர்காணல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் நேர்காணலை முடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம்" என்றார்.
இவரைத் தொடர்ந்து தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜசேகரன் கூறுகையில், "தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இதுவரை 3.30 லட்சம் இளைஞர்கள் உறுப்பினராக உள்ளனர். 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுத்தோம். நாங்கள் மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்க முடியும் என எண்ணியிருந்தோம். மக்கள் நீதி மய்யமும் அதை முன்னெடுத்து செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனால் மக்கள் நீதி மய்யத்தில் கூட்டணி வைப்பதற்காக பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 2) நடைபெற்றது. முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு கோடி இளைஞர்கள் உள்ளோம். இந்த சக்தி வருகின்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் அதை குறுகிய காலத்தில் சாத்தியப்படுத்துவோம்" என்று கூறினார்.