சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் நிகழ்வு, இன்று (ஜன.10) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்பு மற்றும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், தலைமைச் செயலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, “நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் அநாகரிகமாக நடந்து கொண்டார்.
அதை எதிர்த்து நாளை (ஜன.11) சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளோம். அதை சபாநாயகரிடம் இன்று கொடுத்துள்ளோம். இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு பேரவையில் மோசமான கலாச்சாரமாக ஆளுநர் நடந்து கொண்டார். ஆளுநரை தமிழ்நாடு மக்கள் புறந்தள்ள வேண்டும். வரலாற்றிலேயே தமிழ்நாடு ஆளுநரின் செயல் கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஆளுநர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அநாகரீக அரசியல் மற்றும் வெறுப்பு அரசியலை ஆளுநர் கைவிட வேண்டும். வட மாநிலத்தில் எவ்வாறு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்களோ, அதேபோல ஆளுநர் ரவி மூலம் தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பாஜக, உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் லட்சினையை புறக்கணித்த ஆளுநர்