Intro:Body:
”வேலூரில் வெற்றிக்கனி பறித்திடுவோம்! தலைவர் கலைஞரின் தங்கத் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம்!”
- கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின்
அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
முழுமையான வெற்றியை தி.மு.கழகமும் கூட்டணியும் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு - பழிபோட்டு முடக்கப்பட்டதுதான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல்.
தி.மு.கழகத்தைக்
குறி வைத்து வேலூரில் அவதூறு பரப்பினால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அது டெங்குக் காய்ச்சல் தொற்று போலப் பரவிப் பாதிக்கும் என நினைத்து மத்திய-மாநில ஆளுந்தரப்பினரும் அதிகாரத்தைக் கையில் வளைத்து வைத்திருப்போரும் செய்த சதிதான், வேலூர் மக்களவைத் தேர்தல் நிறுத்தம்.
இதில், தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கையை பொதுமக்களே நன்கு அறிவார்கள்.
வேலூரில் நடத்தப்பட்ட நாடகங்களையெல்லாம் கடந்து, தமிழ்நாட்டில் 37 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.கழகம் தலைமையிலான கூட்டணி, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்று, இந்தியத் துணைக் கண்டத்தையே தெற்கு நோக்கி திராவிட இயக்கத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது என்பதுதான், சதிகளை முறியடித்து மூலையில்போட்ட நமது சாதனை வரலாறு.
வேலூரில் பொய்ப்புகார் கற்பித்து, தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில், அதே புகார், தேனியில் அசைக்கவியலாத ஆதாரங்களுடன் அம்பலமாயின. ஆயினும் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? ‘யாமறியோம் பராபரமே’ என்ற பூஜைதான் பதில். அதன் காரணமாகத்தான் அந்த ஒற்றைத் தொகுதியில் மட்டும் சொற்ப முன்னணியில் அ.தி.மு.க.வினால் வெற்றியைக் கடைச்சரக்காக வாங்கிட முடிந்தது என்பதை வாக்காளர்கள் அறிவார்கள்.
"தான் திருடி பிறரை நம்பாள்" என்கிற பழமொழியைப் போல, மத்தியில் அதிகாரம் மிக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தொகுதிக்குத் தொகுதி தாராளமாகவும் ஏராளமாகவும் பணப்பட்டுவாடா செய்தும் வெற்றியின் எல்லையைக்கூடத் தொட முடியாமல் போன அ.தி.மு.க, நம்மைப் பார்த்து, குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல தி.மு.க.வினர் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று சொல்லி, ஜனநாயகத்தையே கொச்சைப்படுத்தி வருகிறது.
முதலமைச்சர் என்ற பொறுப்புக்கு வழி தவறி வந்தவரில் தொடங்கி, அந்தக் கட்சியில் உள்ள பலரும் தங்கள் தோல்விப் புண்களை மறைக்க, கழகத்தைக் கேவலம் செய்வதாக நினைத்து, மகேசன் தீர்ப்புக்கு இணையான மக்களின் தீர்ப்பை அவமதிக்கிறார்கள். அதனால்தான், தேனியில் நடைபெற்ற இணைப்பு விழாப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "தி.மு.க. மிட்டாய் கொடுத்தது என்றால், தேனியில் அ.தி.மு.க. அல்வா கொடுத்து ஏமாற்றியதா?" எனக் கேட்டேன்.
தேனியில் மட்டுமா அல்வா கொடுத்தார்கள்? இந்த ஆட்சி நடைபெறுகிற நாட்களெல்லாம் மக்களுக்கு அல்வாதானே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் சாதாரண அல்வா அல்ல;. டெல்லி அல்வா.
அங்கே கிண்டித் தரப்படுவதை இங்கே விநியோகிக்கும் அரசியல் ஏஜெண்ட்டாக மாறிவிட்டார்கள் மாநில அதிமுக ஆட்சியாளர்கள்.
மக்களுக்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமே செயல்படுத்தப்படு
வதில்லை. வெற்று அறிவிப்புகளும்,வீண் சப்தமும், தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் பச்சைத்துரோகம் இழைக்கும் நடவடிக்கைகளும்தான் பரவலாகத் தொடர்கின்றன.
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பார்கள். கருவூலத்தில் இருந்தால்தான் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கும். அரசுக் கருவூலம் காலி; அவர்களின் இதயமும் காலி.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தமிழ்நாட்டை 3லட்சத்து 26ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தள்ளி, தத்தளிக்க வைத்துள்ளது. இதில் கடந்த 4 ஆண்டுகளில மட்டும் அ.தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் அதிகரித்துள்ள கடன் தொகை மட்டுமே 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் என்பதை தலைமைக் கணக்குத் தணிக்கை துறை அம்பலப்படுத்தியுள்ளது.
அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்தே தமிழ்நாட்டு மக்களின் தலையில் கடன் சுமை ஏற்றப்பட்டு, இப்போது, குருவி தலையில் பனங்காய் வைத்தது போல, பொதுமக்களின் தலையில் தாங்கமுடியாத பெருஞ்சுமை ஏற்றப்பட்டுள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் நிர்வாக அலங்கோலம்; அவலட்சணம்.
இந்த நிலைக்குலைவை மாற்றிட வேண்டும்; நிம்மதி நிறைந்திட வேண்டும்; என்ற எண்ணத்துடன்தான், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் தி.மு.கழகக் கூட்டணியை தமிழக மக்கள் மகத்தான வெற்றி பெற வைத்தார்கள்.
சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளில் 13 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை அளித்தார்கள். வெறும் 9 இடங்களில் மட்டும், அதிகார மோசடியாலும் ஆசை வார்த்தைகளாலும் அடுக்கடுக்கான பொய்களாலும் ஆளுங்கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை ஓரளவுக்குத் தற்காலிகமாகத் தக்க வைத்துக்கொண்டாலும், மக்களின் மனங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்வது தி.மு.கழகம்தான்.
தக்க வைத்த ஆட்சியின் தள்ளாட்டம், நாளுக்கு நாள் அ.தி.மு.கவைத் தகிடு தத்தம் போடவைத்துக் கொண்டிருக்கிறது.
மக்களால் மாலை சூட்டப்பட்டு வெற்றிபெற வைக்கப்பட்ட தி.மு.கழகக் கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் செயல்படும் வேகமும் விவேகமும் வீச்சும் தமிழ்நாட்டின் உரிமைகளை உறுதியாக நிலைநாட்டுவதுடன், இந்திய அரசியலிலும் புயலாய்ச் சுழன்றடித்துப் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடைக்கோடி மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டிய கல்வியை, மீண்டும் பின்னுக்கு இழுத்துச் சென்று, குலக்கல்வி முறைக்குத் தள்ளும் கொடுமையான புதிய கல்விக் கொள்கையையும் அது வலியுறுத்தும் மும்மொழித் திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் நாடெங்கும் எதிரொலிக்க முழங்குகிறார்கள் நமது எம்.பி.க்கள்.
அஞ்சல் துறைத் தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு அவையே அதிரும்படி நமது எம்.பி.க்கள் எழுப்பிய உரிமைக் குரலால், அந்தத் தேர்வே ரத்து செய்யப்படும் நிலை உருவாகி, மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தில் சிறுபான்மை மக்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்ற வாதம், 7 தமிழர்கள் விடுதலை குறித்த நியாயம், நீட் தேர்வு போலவே மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிரான கேள்விகள், ரயில்வே துறையை தனியார்மயமாக்குதை எதிர்த்தும்-தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்களை வலியுறுத்தியும் அழுத்தமான சோஷலிசக்குரல் என நாடாளுமன்ற அவையிலும், வெளியிலும் ஓயாமல் உன்னதமாகச் செயல்பட்டு வருகிறார்கள் தி.மு.க. மற்றும் கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள்.
அதே நேரத்தில், ஆட்சியில் உள்ள அ.தி.மு.க.வின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களை ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு நிராகரித்ததையே வெளிப்படுத்தாமல், மறைத்து வைத்துக்கொண்டு, நீட்டை எதிர்ப்பதாக போலி நாடகம் நடத்தி, பொய்வேடம் பூண்டு, மக்களுக்கு மன்னிக்க முடியாத மாபாதகம் செய்திருக்கிறது அ.தி.மு.க அரசு.
மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக - டெல்டா மாவட்டங்களில் வேளாண்மையைப் பாழ்படுத்தி, பாலைவனமாக்கிடக் கொண்டு வரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட எல்லா முக்கியப் பிரச்சினைகளிலும் இரட்டை வேடத்தையே அ.தி.மு.க. அரசு கடைப்பிடிக்கிறது.
விவசாயிகளை வஞ்சித்து தீராவேதனைக்கு ஆளாக்கும் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதுடன், தங்களின் சொந்த டெண்டர் லாபங்களுக்காக அதனை அதிவேகச் சாலை எனப் பெயர் மாற்ற, திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டுகிறது எடப்பாடி தலைமையிலான அரசு.
அடிப்படைத் தேவையான குடிநீர் முதல், இயற்கைப் பேரிடரான கஜா புயல் நிவாரணம் வரை எதிலும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வக்கில்லாத அரசாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது.
இந்த ஆட்சி எப்போது மாறும் என்று மக்கள் ஆவருடன் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயக முறையில் மாற்றிக் காட்டுவோம் என்பதில் தி.மு.கழகம் மிக உறுதியாக இருக்கிறது.
ஜனநாயக வழியில் கிடைக்கின்ற வாய்ப்புகளில் நாம் பெறுகின்ற வெற்றியே, இந்த ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தி, அடுத்து மலர்ந்து மணம் வீசவிருக்கும் நல்லாட்சிக்கு அடித்தளமாக அமையும்.
அந்த வகையில், ஆகஸ்ட் 5ந் தேதி நடைபெறும் வேலூர் மக்களவைத் தேர்தல் களம், ஜனநாயகம் நமக்கு வழங்கியிருக்கும் மேலும் ஒரு நல்வாய்ப்பாகும்.
தி.மு.கழகத்தின் சார்பில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பேராதரவுடன் தம்பி கதிர் ஆனந்த் களம் காண்கிறார்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு முழுமையாகவும்-அதில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் கழகத்தின் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்கின்ற மக்கள் விரோத ஆட்சியாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு, அதிகார பலத்தாலும் துஷ்பிரயோகத்தாலும் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நப்பாசையுடன், மோசடி வழிகளை முக்காடு போட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள்.
கழகத்தின் மீது மீண்டும் ஏதாவது அவதூறு பரப்ப முடியுமா என அதிகார மையங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதிகாரம் அவர்களிடம் இருந்தாலும், மக்கள் நம் பக்கமே இருக்கிறார்கள். அவர்களின் பேரன்பையும் பேராதரவையும் பெறுவது ஒன்றே நமக்கான முதன்மைப் பணி.
வேலூர் தேர்தல் களத்தில் செயலாற்றும் கழகத்தினர் அனைவரும் அவரவர் பகுதிக்குரிய பொறுப்பாளர்களுடன் இணைந்து நின்று, ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து, அவர்களின் வாக்குகள் உதயசூரியனுக்கே என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆளுந்தரப்பின் அதிகார பலத்தையும் பணபலத்தையும் கபட நாடக பலத்தையும் எதிர்கொள்ள நம்மிடம் இருப்பது, ஆர்வம் மிகுந்த செயல்பலம்தான். தலைவர் கலைஞர் அவர்கள் நம்மை அதற்கேற்றவாறு நன்றாகவே பயிற்றுவித்திருக்கிறார்.
37 தொகுதிகளில் நாம் பெற்ற வெற்றி முழுமை பெறவும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.கழகத்தின் பலம் மேலும் அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாத்திடும் பணியை தொடர்ந்து வலிமையுடனும் வாய்மையுடனும் மேற்கொள்ளவும் வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திடுவீர்!
ஆகஸ்ட் 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்து, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தங்கத் திருவடியில் காணிக்கையாக்கிடுவீர்!
அன்புடன்,
- மு.க. ஸ்டாலின்
22.7.2019
Conclusion: