சென்னை: எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டத்தில் பங்கேற்க வருகிற 17ஆம் தேதி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பெங்களூரு செல்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்து வருகிறது. இதனால் பாஜக அரசு இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன்படி, வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், கர்நாடகா உடனான மேகதாது பிரச்னை காரணமாக பெங்களூருவில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள மாட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் 24 அரசியல் கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும், தமிழ்நாட்டில் மதிமுக, கொங்கு தேச மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு ஃபிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், பெங்களூருவில் நடைபெற உள்ள இரண்டாவது எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தியும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கொங்கு தேச மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாக தேர்தலை சந்தித்தது என்பது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Opposition Unity Meet in Bengaluru: கர்நாடகாவில் எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டம் - மதிமுக, விசிக பங்கேற்பு?