ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, அம்மாநில மக்கள் தங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டதாக தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த நிலை நீடித்தால் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர இயலாது என்று எண்ணிய மத்திய உள்துறை அமைச்சகம், துணை ராணுவப் படையினரின் உதவியுடன் போராட்டங்களை ஒடுக்கியது.
அதன் நீட்சியாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களின் ஃபரூக் அப்துல்லாவை மட்டும் விடுவிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும், இந்த நடவடிக்கை ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தடுப்புக் காவலில் உள்ள உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களையும் இதேபோல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.