சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 25ஆம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்களது போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்காத நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று மூன்று மணி நேரத்திற்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்பாத மருத்துவர்களின் அனைத்து பணியிடம் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். விஜய பாஸ்கர் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் நிறைவேறாத வரை பணிக்குத் திரும்பமாட்டோம் என்ற உறுதியோடு மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டம் செய்துவருகின்றனர்.
மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் அரசிடம் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல் துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மருத்துவர்களைச் சந்தித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிகாரத்தில் இருப்பதால் மருத்துவர்களை மிரட்டக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.