கோவை: கோவையின் உக்கடம் பகுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வியாழக்கிழமை மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாணவி முதலில் படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலே தற்கொலைக்கு காரணம் என மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இயற்பியல் ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும், வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி