அதிமுக அரசு, முதலீடுகளை ஈர்த்து விட்டதாகவும், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு விட்டதாகவும் கூறி, தினமும் பொய்களை கட்டவிழ்த்து வருவதாக மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 49.8 விழுக்காடாக அதிகரித்து, தேசிய சராசரியான 23.5 விழுக்காட்டை விட இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 2019ஆம் ஆண்டிலிருந்த வேலைவாய்ப்பின்மையானது, தற்போது 10 மடங்காக உயர்ந்து, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்து, அவர்களின் நம்பிக்கையை நாசம் செய்து விட்டது.
'வெற்று அறிவிப்புகள்' 'வீண் விளம்பரங்கள்' 'கமிஷனுக்கு விடப்பட்ட டெண்டர் பற்றி மாவட்ட அளவில் ஆய்வுகள்' போன்றவற்றை மட்டுமே முன்னிறுத்தி, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் தொழில் வளர்ச்சியையும் படுபாதாளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீழ்த்தியிருக்கிறார்.
எவ்வித ஒழுங்குமுறையும் இல்லாமல், அறிவியல் ரீதியான காரணங்களும் புரியாமல், கரோனா பேரிடர் ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்து வருகிறார். அதிமுக அரசின் அடுத்தடுத்த குதர்க்கமான நடவடிக்கைகளால், கரோனா பேரிடர் காலம் 'வேலை இழப்பின்' உச்சக்கட்ட காலமாக மாறியுள்ளது.
டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டு, பிழைப்புத் தேடி வேலைக்கு செல்வோரைத் தடுத்து வருகிறது அதிமுக அரசு. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் சென்ற மாதமே அறிவுறுத்தியும், இ-பாஸ் நடைமுறையை இன்று வரை பல வகையான 'முறைகேடுகளுடன்' செயல்படுத்தி, போக்குவரத்தையும் தடை செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு நடத்திய ஆய்வில், மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களில் மட்டும், தமிழ்நாட்டில் சராசரியாக 53 விழுக்காடு வீடுகளில் தலா ஒருவர் வேலை இழந்திருக்கும் கொடுமை நிகழ்ந்துள்ளது.
நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வித்தியாசமின்றி, கிராமப்புறங்களில் 56 விழுக்காடு குடும்பங்களிலும், நகர்ப்புறங்களில் 50 விழுக்காடு குடும்பங்களிலும் இந்த வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அமைப்புசாரா தொழிலாளர்களில் மட்டும் 83.4 விழுக்காட்டினர் தங்களது தினசரி வேலையை இழந்துள்ளனர்.
வாழ்க்கைப் பேரிடரைப் போக்கவே, ”குடும்பத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் நேரடியாக பண உதவி செய்யுங்கள்” என்று திமுக தொடர்ந்து, பலமுறை ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியது. திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் இதையே வலியுறுத்தியிருக்கிறோம்.
ஆனால் முதலமைச்சரும், கஜானாவைக் கொள்ளையடிக்கும் அரசும் அப்பாவி இளைஞர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் வேலை இழப்பையும் கண்டு கொள்ளவில்லை. கிராமப்புற, நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்கவும் முன்வரவில்லை.
முதலீடுகளை ஈர்த்து விட்டோம், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு விட்டோம் என்று தினமும் அமைச்சர்களும், முதலமைச்சரும் பொய்களை கட்டவிழ்த்து விட்டுக் காலத்தைக் கழித்து வருகிறார்கள்.
உலக முதலீட்டாளர் மாநாடுகள், வெளிநாடு சுற்றுலா, கரோனா காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின்படி எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன, எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பன குறித்து தமிழ்நாடு மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.