இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்னர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர். அப்போது, தண்ணீர் பிரச்னை குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொண்டுவந்தார்.
அந்தத் தீர்மானம் குறித்து பேசிய அவர், தமிழ்நாடு அரசை விமர்சித்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் ட்விட்டர் பதிவை சுட்டிக்காட்டினார். இதையடுத்து, ஆளுநரை விமர்சித்து அவையில் பேசுவதை அனுமதிக்க முடியாது என ஸ்டாலினின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “ஒட்டுமொத்தமாக இன்று ஒரு நாள் முழுவதையும் குடிநீர் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக ஒதுக்கிவைத்து, அனைத்து உறுப்பினர்களும் அதுபற்றி விவாதிப்பதற்காக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தேன்.
புதுவை மாநிலத்தின் ஆளுநர் கிரண்பேடி தான் ஒரு ஆளுநர் என்பதையே மறந்து, வரம்பு மீறி சில செய்திகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அனைத்து பத்திரிகைகளிலும் அந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது.
தமிழக மக்களை மிகக் கொச்சையாக விமர்சித்துப் பேசியுள்ள கிரண்பேடியின் பேச்சுக்கு விளக்கம் கேட்டேன். ஆனால், சபாநாயகர் அனுமதிக்கவில்லை. சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகமும், இந்த விவகாரத்தில் கருத்து சொல்வதற்கு கிரண்பேடிக்கு தகுதியில்லை என்றார் காட்டமாக. நான் பேசியதும், அவர் பேசியதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளதக்கதில்லை. ஆகவே, நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்றார்.