சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஒரு கால பூஜைத் திட்டம் 12 ஆயிரத்து 959 கோயில்களில் செயல்பாட்டில் உள்ளது. இக்கோயில்களில் பணிபுரியும், அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, இத்திட்டத்தின் தொடக்கவிழா திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூசாரிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கி திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
பின்னர் நிகழ்வில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம், தமிழில் வழிபாடு செய்யலாம் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அர்ச்சகர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு 15 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு யாரும் கேள்விப்படாத 120 அறிவிப்புகளைச் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஏராளமான கோயில்களில் திருப்பணிகள் நடைபெறவிருக்கின்றன. இந்து சமய அறநிலையத் துறை பெயரில் கல்லூரி தொடங்கப்படவுள்ளது. அறநிலையத் துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப்போகும் காட்சிகளை நாம் பார்க்கலாம்.
ஒரு கால பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோயில்களைச் சேர்ந்த அரச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நான் தொடங்கிவைத்திருக்கிறேன். அமைச்சர் சேகர்பாபு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல்பாபு என்று அழைப்பது சிறப்பாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: ’ஆக்கிரமிப்பில் இருக்கும் 75 இடங்கள் ஒரு மாதத்துக்குள் கைப்பற்றப்படும்’