சென்னை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 56. இன்று காலை 'எதிர்நீச்சல்' தொடருக்காக டப்பிங் பணிகளில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடன் பணியாற்றியவர்கள் அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மாரிமுத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மறைந்த இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், " கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர், மாரிமுத்து.
ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ் பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும், நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையேக் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக அறியப்பட்டவர், மாரிமுத்து. இவர் வெள்ளித்திரையில் இயக்குநர் மிஷ்கினின் யுத்தம் செய் படம் மூலம் நடிகராக அறிமுகமாகினார். பரியேறும் பெருமாள் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சின்னத்திரையில் எதிர்நீச்சல் தொடர் மூலம் மிகவும் பிரபலமடைந்தார், மாரிமுத்து.
ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து பேசும் ’இந்தாம்மா..ஏய்’ என்கிற வசனம் சமூக வலைதலங்களில் மிகவும் பிரபலம். அந்த வசனத்தை வைத்து பல மீம்ஸ்கள் வலம் வந்தது. முற்போக்குச் சிந்தனையாளரான மாரிமுத்து, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜோதிடத்தைப் பற்றி பேசிய வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் சுசீந்திரன், கவிஞர் வைரமுத்து , சரத்குமார், ரோபோ சங்கர், இயக்குநர் வசந்த், நடிகர் ராஜேஷ் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:நடிகர் மாரிமுத்து மறைவு - திரையுலகினர் கண்ணீர் மல்க அஞ்சலி!