முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியன் மனைவியும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயாருமான ராஜாமணி தங்கபாண்டியன் (84), வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார்.
இவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "முத்தமிழறிஞர் கலைஞருக்கு தென் மாவட்டங்களில் “போர் வீரராக” விளங்கிய, மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் அவர்களின் மனைவி ராஜாமணி தங்கபாண்டியன் உடல் நலிவுற்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன்.
அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த தங்கபாண்டியனுக்கு கழகப் பணியிலும் - அவரது பொதுப்பணியிலும் உற்ற துணையாகவும் - உறுதிமிக்க இல்லத்தரசியாகவும் விளங்கியவர்.
நான் விருதுநகர் மாவட்டத்திற்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் - அவரைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளேன். அவரும் பெற்ற அன்னையைப் போன்று என் மீது பாசமழை பொழிந்து, நலம் விசாரித்து எனக்கும் என் குடும்பத்திற்கும் அன்பின் இமயமாகத் திகழ்ந்தவர்.
இன்று கழகப் பணிகளில் எனக்குத் துணையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு - தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை வளர்த்தெடுத்து - ஆளாக்கி ஒருவர் சட்டப்பேரவையிலும் இன்னொருவர் நாடாளுமன்றத்திலும் மக்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றால், அந்தப் பெருமை முழுக்க முழுக்க ராஜாமணி தங்கபாண்டியனையே சாரும்.அவரது மறைவு கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும்.
அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் தங்கம் தென்னரசுக்கும் அன்புச் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் காலமானார்