சென்னை: நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் (NLC Land Acquisition) ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (மார்ச்.10) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், 'நெய்வேலி நில எடுப்பு பிரச்சனைகள் குறித்து முதலமைச்சரிடம் 1 மணிநேரம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளதாகவும், குறிப்பாக, நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கடந்த ஆண்டு நிலம் கொடுத்தவர்ளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கபடவில்லை எனவும் தங்களாகவே நிலங்களை வழங்கியவர்களுக்கு விரைந்து உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும், அதேபோல் காவல்துறையை வைத்து கட்டாயப்படுத்தி விவசாயிகளை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார். தாங்கள் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக, மத்திய அரசுக்கு விரிவான கடிதம் எழுத உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளதாக்கவும் அவர் குறிப்பிட்டார்.
இவரைத்தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், 'வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்துள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு முழுமையாக அக்கறை எடுத்துக்கொண்டு உரிய பலன் கிடைக்கும் வகையில் சில வரையறையை எட்டி உள்ளது. இருப்பினும் அவை போதுமானதாக இல்லை என்பதை முதலமைச்சரிடம் தெளிவுபடுத்தி உள்ளோம். முதலமைச்சருடனான இந்த சந்திப்பு மனநிறைவை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், 'நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் இன்றைய நிலவரத்தின் அடிப்படையில் உரிய இழப்பீடு கிடைக்க வேண்டும். அதேபோல், நிலமற்ற கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அத்துடன், ஆண்டிற்கு ரூ.1,000 கோடி லாபம் ஈட்டும் இந்த என்எல்சி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனமே கூடாது என சிலர் பிரச்சாரம் செய்து வருவது என்பது முற்றிலும் தவறானது எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், 'ஏக்கருக்கு 75 லட்சம் ரூபாயை அரசு இழப்பீடாக நிர்ணயித்துள்ளது. ஏக்கருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ள 1,700 பேரை பணி நிரந்தரம் செய்வதற்கான ஒப்பந்ததைக் கொண்டுவர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரதில் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவை குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்காக ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் கூறினார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரிஜினல் தளபதிக்கே டஃப் கொடுக்கும் ஒன்றிய தளபதி: பட்டியல் போடும் ஹைடெக் எம்எல்ஏ; பின்னணி என்ன?