திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி தனது 67ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார். இதனை முன்னிட்டு அக்கட்சியின் தொண்டர்கள் வழக்கமாகத் தாங்கள் கொண்டாடும், ‘இளைஞர் எழுச்சி நாள்’ நிகழ்ச்சிகளை இந்த ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர்.
மாநிலம் முழுவதும் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடத்தி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்குவது, ரத்த தான முகாம்கள் நடத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனத் திமுகவினர் பம்பரமாய் சுழன்றுவருகின்றனர்.
இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள்விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கட்சியின் பொதுச்செயலாளரும், முதுபெரும் அரசியல் தலைவருமான க. அன்பழகன் உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் இந்த நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தமிழ்நாட்டிற்காகவும் தமிழ் மொழிக்காகவும் முக்கால் நூற்றாண்டு காலம் பாடுபட்ட பேராசிரியர் அன்பழகன் உடல் நலிவுற்று இருக்கும் இச்சூழலில், கழக முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட யாரும் பிறந்தநாள் அன்று தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ’மதமும் சாதியும் பயன்படுத்தியவர்களையே பதம் பார்த்துவிடும் என்பதை பாஜக உணர வேண்டும்’